அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த போது. நாளை வருவேன் என்று அவளிடம் சொல்லியிருந்தாலும், இந்த பனிகுத்தும் அதிகாலையில் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது.
லாப்டாப் பேக்கில் இருந்த சாவியைத் துளாவி எடுத்து, கேட்டைத் திறந்தான். இரண்டு நாட்கள் பேப்பர் அப்படியே காரின் கதவுக்கு அருகில் எடுக்காமல் கிடந்தது. நேற்று அவளிடம் பேசிய போது ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றியது. பேப்பரை எடுத்துக் கொண்டு, கதவுக்கு அருகே வந்து, வராண்டா ஸ்விட்சை தட்டினான். வெளிச்சம் பரவ, சாவியை நுழைத்து கதவைத் திறந்தான். வாசல் நிலையை ஒட்டி கொஞ்சம் தண்ணீர் தேங்கி காய்ந்திருந்தது போல இருந்தது.
‘திவ்யா!’ என்று குரல் கொடுத்தான். பூட்டிய கதவுகளுக்குள் அவள் இல்லை என்று புத்திக்கு எட்டியிருந்தபோதும், தன்னையே அறியாமல் அழைக்கத்தோன்றியது, ஏதாவது அறையைத் திறந்து கொண்டு வந்துவிடுவாள் என்று. கதவை உட்புறமாக பூட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான். டிராவல் பேக்கையும், லாப்டாப் பேக்கையும் அப்படியே லிவ்விங் ரூமில் இருந்த சோஃபாவில் போட்டுவிட்டு, டீப்பாயில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று அங்கு கிடந்த புத்தகங்களை ஒதுக்கிப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை. உள்ளறைக்குச் சென்று, வார்ட்ரோப்பில் இருந்த லுங்கியை எடுத்து துணியை மாற்றிக் கொண்டு, முகம், கை, கால் கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கம் சென்றான்.
ஒரு க்ரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்ட ட்யூப்ளே வீடு அது. லிவ்விங் ரூமில் இருந்து மாடிக்குச் செல்லும் ஹெலிகல் ஸ்டேர்கேஸ், வளைந்த படிக்கட்டுகள். படிகளுக்கு நேர் மேலே சீலிங்கில் ஸ்கை லைட் அமைப்புடன் இருப்பதால், வீட்டிற்குள் எப்போதும் வெளிச்சம் இருக்கும் பகல் நேரங்களில். மாடியில் ஏறியதும், ரூஃப் கார்டனுடன் கூடிய டெரஸ். மாஸ்டர் பெட் ரூமின் ஃப்ரெஞ்ச் வின்டோஸை திறந்தாலும், ரூஃப் கார்டனுக்குள் இறங்கலாம். பார்த்து பார்த்து கட்டிய வீடு, திவ்யாவின் கனவுகளில் ஒரு கான்செப்சுவல் வீடு அது. அழகையும், பயன்பாட்டையும் இணைத்துக் கட்டப்பட்ட வீடு.
வீட்டின் உள்ளே ஒவ்வொரு அறையிலும், நிஷ் எனப்படும் உட்குடைவுடன் கூடிய அமைப்புகளில் வேறு வர்ணத்துடன் கூடிய விளக்குகள். திவ்யாவின் ரசனைக்கு உதாரணங்கள். சமையலறை இத்தாலிய முறைப்படி மாடுலர் டிசைனில் கட்டப்பட்ட திறந்த சமையலறை. லிவ்விங் ரூமில் இருந்து பார்க்கும்போது சமையலறை அழகாய்த் தெரியும். அடுக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகளும், பீங்கான் சாமான்களும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பார் போன்று தெரியும். சற்றே உயர்ந்த மேடை ப்ரேக் பாஸ்ட் கவுன்டருடன் இரண்டு உயர்ந்த ஸ்டூல்களும் அதை உறுதிப்படுத்தும்.
சமையலறையை அடைந்து, பிரிட்ஜை பார்த்த போது பால், தோசை மாவு, முட்டைகள், பழங்கள் என்று தேவையான எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கவரைக் கிழித்து, பாலை சட்டியில் ஊற்றி, காஃபி தயார் செய்தான், காஃபி மேக்கரில் கொஞ்சம் இருந்த டிகாக்க்ஷனும் கலந்த காஃபி. எடுத்துக் கொண்டு பேப்பரை எடுத்து லிவ்விங் ரூமில் உட்கார்ந்து கொண்டான். பேப்பரை விரிக்கும் போதே, அவள் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. செல்ஃபோனை எடுத்து அவள் நம்பரை டயல் செய்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக